மகப்பேறு

மருந்து.கொம் – மகப்பேறு

மகப்பேறு

மகப்பேறென்பது கர்ப்பந்தரித்து (கருத்தரித்து) குழந்தை பெற்றெடுப்பதைக் குறிக்கிறது. கருத்தரித்ததிலிருந்து குழந்தை, குழந்தையொன்றை (சில சமயம் இரண்டு, இரண்டிற்கும் மேற்பட்டவை) பெற்றெடுக்கும் வரையான காலம் கற்பகாலமாகும்.

கருத்தரித்தலிருந்து 38 கிழமைகளின் பின்பு குழந்தை பிறக்கிறது. இது அநேகமாக கடைசியான மாதவிடாயின் 40 கிழமைகள் பின்னராகும். கர்பகாலம் (மனிதரில்) பொதுவாக ஒன்பது மாதங்களாகும். கற்பகாலம் 3 காலக்கூறாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று, நடு மூன்று, கடை மூன்று மாதங்களாக அமைகின்றன. இவை கருத்தரிப்பிற்கு முன்னைய காலத்தைக் கருதி நிற்கவில்லை. முதற் கூற்றில் கருச்சிதைவு ஏற்படக்கூடிய வாய்புகள் அதிகமாதலால் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும். இரண்டாவது கூறில், சிசு விருத்தியை இலகுவாக அவதானிக்கவும், கண்டறியவும் கூடியதாகவும் இருக்கும். மூன்றாவதும் இறுதியுமான காலக்கூற்றில்தான்’ குழந்தை சுயமாக (கருப்பையிற்கு வெளியே) வாழக்கூடிய நிலை உறுதிப்படுத்தப்படுகிறது.

கருத்தரித்தல்

ஆண் பெண் புணர்ச்சி (கலவி) யின் போது ஆணிலிருந்து வரும் விந்து பெண்ணின் முட்டையுடன் கலக்கும் பொழுது கருத்தரிப்பு நடைபெறுகிறது. இயற்கையான முறையில் நடைபெற முடியாத பொழுது செயற்கையான கருத்தரிப்பும் நடைபெறலாம். கருத்தரித்தல் பெண்களின் கருப்பையின் தொடர்ச்சியாக அமைந்த பலோப்பியன் குழாயினுள் நடைபெறுகின்றது. கருக்கட்டப்பட்ட முட்டை பின்னர், சிசு வளர்ச்சியை தாங்கிகொள்ள ஆயத்தமாகவிருக்கும். கருப்பை சுவரில் தன்னை பதித்து வளர்ச்சியடையும் (இது நடைபெறாதபோது கருப்பை சுவர் சிதைவடைந்து – மாதவிடாயாக வெளியேறும்)

கர்ப்ப காலம், கருப்பையில் கரு தங்கிய நாளிலிருந்து தொடங்கிய பொழுதும், இதை வரையிட்டு கூறுவது சிலசமயம் கடினமானதாகும். கடைசியான மாதவிடாய் நாளிலிருந்து கணக்கெடுக்கபட்படுகிறது. இந்த நாளை அடிப்படையாக வைத்தே குழந்தை பிறக்கப்போகும் நாள் அல்லது தேதி குறிக்கப்படுகிறது. மேலும் ஏனைய சோதனைகள் செய்யப்பட வேண்டிய தேதிகளும் குறிக்கப்படுகின்றன. கர்பகாலம் 37 – 42 கிழமைகளாக இருக்கலாம். 42 கிழமைக்கு பின்னும் குழந்தை பிறக்காவிடில், அது தாயிற்கும் சேயிற்கும் பிரச்சனையாகப் போய்விடும் அபாயமுண்டு. குழந்தை பிறக்கும் தேதியை மேற்படி தீர்மானிக்கும் முறை மிகவும் தீர்கமானதல்ல. இதுவொரு அண்ணளவான கணிப்பாகும் ( கர்ப்பம்தரித்த நாள் திட்டமாகத் தெரிவதில்லை, பல காரணிகளுண்டு).

கர்ப்பமுற்றதைத் தீர்மானித்தல்:

கருவுற்றிருப்பதை பல வழிகளில் சோதனை செய்து பார்க்கலாம். சோதனைக் கூடங்களில் இரத்த, சிறுநீர் சோதனை மூலம், ஓமோன் மாற்றமடைந்திருப்பதைக் கண்டறிவதனால் கருவுற்றிருப்தை அறிந்து கொள்ளலாம். இதில் கருபதிந்த 6 – 8 நாட்களிலேயே அறியலாம். மருந்து கடைகளில் கிடைக்கும் சிறுநீரைச் சோதித்தறியும் முறையில் கருப்பதிந்த 12 -15 நாட்களின் பின்பே சோதனை செய்து பார்க்கமுடியும். மேற் கூறிய இரு முறைகளிலும் விருத்தியடையும் கருவின் வயதைக் கூறமுடியாது. சோனோகிராப் முறை மூலம் சிசுவின் வயதை பெரும்பாலும் சரியாக கூறக்கூடும். ஆயினும் கடைசியான மாதவிடாயிலிருந்து கணக்கிடும் முறையே கூடிய அளவில் பாவனையிலுள்ளது. இம்முறையில், மாதவிடாய் காலச்சக்கர நாட்களினளவு, பெண்களுக்கு வேறுபட்டிருப்பதனால், குழந்தை பிறக்கும் தேதியைக் குறிப்பது சில கிழமைகளினால் வேறுபடும்.

கர்ப்பகால போசாக்குணவு:

ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க, கர்ப்பகாலத்தில் தாய் போசாக்குணவை உட்கொள்ளுவது மிகவும் அவசியமாகும். கர்ப்பிணிகள், ஆரோக்கியமான, நிறையுணவில் மாப்பொருள் (கபோவைதரேற்று), கொழுப்பு, புரதம் வேண்டிய அளவில் இருக்குமாறும், பழங்களும், புதிய மரக்கறிகளையும் வழக்கமாக சேர்த்து வந்தால் போதியளவான போசாக்குணவு உடலுக்கு கிடைக்கும். மதநம்பிக்கை அல்லது தேக அரோக்கியம் அல்லது சில சில மூடநம்பிக்கைகள் காரணமாக உணவில் மாற்றம் அல்லது தவிர்த்தலைச் செய்வதாக இருந்தால், அவர்கள் உணவு ஆலோசகரை நாடி ஆலோசனை பெறவேண்டும்.

போலிக் அமிலம் (போலேற், உயிர்ச்சத்து பி9 எனவும் அழைக்கப்படும்). முதல் 28 நாட்களில் சிசு விருத்தியின் போது மிகவும் தேவைப்படுகிறது. இது ஸ்பைன பிவிடா என்னும் கருமையான பிறப்புக் குறைபாட்டை தவிர்க்க மிகவும் முக்கியமானதாகும். போலேற், பச்சைநிற இலைக்கறிகள் (ஸ்பினைச்), இலைக்கறி சம்பல், வர்த்தகை வகை, பழங்கள் கூமுஸ், முட்டை போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது, உயிர்ச்சத்து ‘டி’, கல்சியம் போன்றவை, என்பு வளர்ச்சிக்கு வேண்டியவையாகும். ஒமேகா – 3 போன்ற கட்டாய அமினோ அமிலங்களும் தேவைப்படுகின்றன. இவை யாவும் போதியளவு உணவினூடாக கிடைக்காத பொழுது, குறைநிரப்பிகளினூடாக எடுத்துக்கொள்ளலாம். சில உணவுகளிலும் ( முட்டை – சல்மொனெல்லர், பால் – விஸ்ரீறியா போன்ற) சமைக்காத உணவிலும் நோய்காரணிகள் காணப்படுவதனால், சமயல் வேளைகளிலும், உண்ணும் பொழுதும் சுகாதார, சுத்தமான முறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். எல்லாம் நன்றாக அமையும் பொழுது தாய்மைப்பேறு சுகமான அனுபவமாகும்.

மகப்பேறின்மை

ஒரு வருட காலமாகவோ அல்லது அதற்கு சற்று அதிகமாகவோ சூல்கொள்ளும் பெண். உடலுறவின் போது கருத்தரியாமல் போதல் மகப்பேறின்மை எனக்கொள்ளப்படும். இது கருத்தரித்த பின் பிரசவம் வரையில் சென்றடையாத நிலையையும் குறிக்கும்.

சூல்கொள்ளல், சூல் விந்தினால் கருக்கட்டப்படுதல், கருக்கட்டப்பட்ட முட்டை பலோப்பியன் குழாயினூடு நகர்ந்து கருப்பையை அடைந்து வளர்ச்சியடைதல் போன்ற சிக்கலான நிலைகளை இது கொண்டிருக்கின்றது. ஏறக்குறைய 40வீதம் குழந்தைப்பேறற்ற தம்பதியினரில், இந்நிலைக்கு ஆணே பகுதியாகவோ முழுமையாகவோ காரணமாகின்றார். ஆண்களின் மகப்பேறின்மைக்கு குறைவான எண்ணிக்கையில் விந்து உற்பத்தி செய்யப்படடுதல் முதன்மையான காரணமாகும். இச்சமயங்களில் உடற்கூற்றமைப்பில் ஏதாவது மாறுபாடுகள் காரணமாகலாம்.

ஆண்களில் விந்து எண்ணிக்கை குறைவாக காணப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. மதுபானம் அருந்துதல், அகச்சுரக்கும் சுரப்பிகளின் குறைபாடுகள், சூழலிலுள்ள நஞ்சுப்பதார்த்தம், பாதிப்பான கதிர்கள், அதிகமான சூடு ஆகியனவும், நீண்ட நாள் காய்ச்சல் அல்லது வேறேதாவது வருத்தம், விதையில் ஏற்ப்பட்ட அடிபாடு அல்லது காயம் போன்றன காரணங்களாகின்றன. விதையில் விந்தணுக்கள் தோன்றுவதற்கு குறிப்பிட்ட ஒரு வெப்பநிலையில் விதையுறையிலுள்ள விதைகள் பேணப்படவேண்டும். விதையைச் சுற்றியுள்ள நாளங்கள், சில ஆண்களில் அதிகம் விரிவடைவதனால், குருதி விதையைச் சுற்றி நில்லாமல், வடிந்தோடுவதனால், விதையில் தோன்றும் விந்தணுக்களை இது பாதிக்கின்றது.

பெண்கனில் மகப்பேறின்மைக்கு, சூலகத்திலுள்ள குறைபாடுகள், பலோப்பியன் குழாய் அடைப்புக்கள், என்டோமீற்றியோசிஸ் எனப்படும் கருப்பையில் வழமைக்கு மாறான உட்சுவர் கட்டி வளர்ச்சிகள், யுறையின் பைபுரைட் எனப்படும் கருப்பையின் உள் வெளிச் சுவர்களில் தோன்றக் கூடிய பாதகமற்ற கட்டிகள் போன்றன காரணங்களாகின்றன. சில பெண்களில் விந்தணுவை எதிரியாக கருதி எதிர்ப்பு உடலங்கள் தோற்றுவிக்கப்படுவதனால் பெண்ணின் உடலில் விந்து ஏற்றுக்கொள்ளப்படாமல் போகின்றது. சல்லமைடியா எனப்படும் உடலுறவின்போது கடத்தப்படும் நோயும் மகப்பேறின்மைக்கு ஒரு காரணமாகும். பெற்றோர் ஆகிவிடும் பயம், வாழ்க்கைப்பழு, மகப்பேறின்மையால் ஏற்படும் வாழ்க்கைப்பழு அல்லது சமூகப்பழி ஆகியன உளவியற் காரணங்களாகின்றன.

மகப்பேறின்மைக்கான பொதுவான காரணங்களாக பின்வருவன குறிப்பிடப்படும்:
¬- பெண்களில் கருப்பை உட்சுவரின் கட்டி வளர்ச்சிக்ள (என்டோமீற்றியோசிஸ்).
– ஆண்களில் மாற்றமைந்த விந்தணுக்கள் அல்லது குறைந்த எண்ணிக்கையில் விந்தணுக்கள் தோன்றுதல், விந்தணுக்களை பெண் குறியில் செலுத்துவதற்கு தேவையான ஆண் குறியின் விறைப்புத்தன்மை இல்லாதிருத்தல் (இறக்ரையில் டிஸ்பங்சன்).
– பெண்களில் பலோப்பியன் குழாயில் தடைகள் இருத்தல்.
– பெண்களில் சூல் தோன்றாதிருத்தல் அல்லது ஒழுங்கன்றி தோன்றுதல்.
– தம்பதியினர் முழுமையான உடலுறவை செய்ய முடியாதிருத்தல்.
– பெண்களில் கருப்பை வாயிலில் தோன்றும் சளிப்படை விந்தணுக்களைக் கொன்றுவிடுதல்.
– பெண்களில் முழுமையான கர்ப்ப காலத்தைக்கொண்டு செல்வதற்கு தேவையான புறோஜெஸ்ரோன் எனப்படும் ஓமோன் போதியளவு சுரக்கப்படாமை.
– பெண்களின் வயது முற்பத்துநான்கிற்கு அதிகமாக இருத்தல்.

பொதுவாக மகப்பேறின்மைக்கு ஒன்றிற்கு மேற்ப்பட்ட காரணிகள் காரணங்களாகின்றன.

அறிவுரைகள்:
– ஆண்கள் விந்து எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமானால் மதுபானம் அருந்துவதைத் தவிர்க்கவேண்டும், பெண்களில் முட்டை கருப்பையில் தங்கி வளர்வதை தடை செய்கிறது.

– வைத்தியர் சொல்வதைத் தவிர ஏனைய மருந்துகளை எடுக்கக்கூடாது. குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்னும் விருப்பத்தையும் வைத்தியரிடம் கூறவேண்டும். இம்மருந்துகளில் ஏதாவது ஒன்று கருவுறுவதைத் தடைசெய்யக்கூடும்.

– புகை பிடிக்கவோ, பிடிக்கப்பட்ட புகையுள்ள இடங்களை தவிர்க்க வேண்டும்.

– நிறையுணவு முக்கியமானதாகும். விலங்கு கொழுப்பு, பொரித்த உணவு, சீனி கொண்ட பதார்த்தம், அவசர உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். பூசினி விதை, தேன் மா வதை அல்லது றோயல் ஜெலி உண்ண வேண்டும். தேன் மா வதை உண்ணும் போது உணவு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்ப்பட்டால் உட்கொள்வதை நிறுத்திவிடவேண்டும்.

– உடலுறவின் போது பயன்படுத்தப்படும் சில செயற்கையான உராய்வு நீக்கிகள் விந்தணுக்கள் கருப்பையின் கழுத்தை அடைவதை தடைசெய்யும். உமிழ் நீர் சில சமயம் விந்தணுவிற்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.

– மகப்பேறின்மை வாழ்கையில் ஒரு பழுவாகவும், வாழ்க்கையின் பழியாகவும் அமைவதால், அதை ஏற்றுக்கொண்டு, மகப்பேற்றை அடைவதற்கு வழி காணவேண்டும்.

– மூலிகை மருந்துகள், குறைநிரப்பிகள், போசாக்குணவுகள் போன்றவற்றை ஆலோசனையுடன் பெறுவதனால் மேற்கண்ட நிலைகளில் பலவற்றை நிவர்த்திக்கலாம்.

கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்பது எப்படி?

எனது சிகிச்சைக் கூடத்துக்கு குழந்தையொன்றைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று பலர் வருகின்றார்கள். ஏறக்குறைய 60% ஆன ஐரோப்பா வாழும் இலங்கையில் வாழும் புலம்பெயர்ந்த பெண்களிலே மகப்பேறின்மைநிலை காணப்படுகின்றது. இது பெரும்பாலும் உடலில் சுரக்கப்படும் ஓமோன்களின் சமநிலைக் குழப்பம் காரணமாக மாதவிடாய்ச் சக்கரம் ஒழுங்கீனமாக நடைபெற முட்டை(Egg) குறைவாகவே வெளிவருகிறது. சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாட்டில் வாழ்வதால் ஏற்படும் மனவழுத்தமும் உடலில் ஏற்ப்படும் பாதிப்புக்களுமே காரணமென எண்ணுகின்றேன். புகலிட நாடுகளில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களில் (உ-ம் குடியுரிமை நிலை, வாழ்க்கைமுறை, மொழி, தொழில், வாழ்க்கைக்கான வருமானம்) சிக்கித் தவிக்கும்போது இவை தவிர்க்கமுடியாதவாறு உடல், உளத் தாக்கங்களை ஏற்ப்படுத்துகின்றன. இந்நிலை நீடிக்கும்போது நோய்நிலை தோன்றுகின்றது. இங்கு நான் மகப்பேறின்மையை ஒரு நோய்நிலையென எவ்வகையிலும் குறிப்பிடவில்லை, ஆயினும் இது எமது புகலிட நாட்டு வாழ்க்கை முறையினால் கிடைக்குமொரு இயல்பற்ற வாழ்க்கை முறையென்றே குறிப்பிட விரும்புகின்றேன். ஏனெய 40% மகப்பேறின்மைக்கு ஆண்களில் காணப்படும் விந்தெண்ணிக்கைக் குறைவு (low sperm count), ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாடு (erectile dysflunction) போன்றன காரணங்களாகலாம். மேலும் புகலிட நாடுகளில் எமது உணவுகளில் மாற்றம், முன்தயாரிக்கப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல், அதகளவில் சிவப்பு இறைச்சி, சீனி மற்றும் மதுபானம், ஏனைய செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பானங்கள், காற்றூட்டப்பட்ட பானங்கள் (fizzy drinks) போன்றன எமது சமூதாயத்தில் மகப்பேறின்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

புகலிட நாடுகளில், உழைப்பதற்காக ஆண்கள் நீண்டநேரம் வேலைத்தளங்களிலிருக்க, பெண்கள் தனிமையில் வீட்டிலிருக்கிறார்கள். தாய் நாட்டில் பெரியதொரு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த நிலைமாறி, உற்றாரும் உறவினருமின்றி, நண்பர்களும் தோழருமின்றி தனிமைதரும் வெறுமை மனச்சோர்வை தருவதால் ஒருவரின் உடல் மனநலம் பாதிப்புள்ளாகிறது.

எனதனுபவங்களில் சில:
முப்பத்தெட்டு வயதுடைய பெண் (A) திருமணமாகி ஆறு வருடங்களாயிருக்கும். இவர் மூன்று தடவைகளில் முயற்சித்திருந்த IVF (In Vitro Fertilization) என்னும் கருத்தரிக்கும் முறையினாலும் கருத்தரிக்க கூடாமல் போயிற்று. இவரினால் முட்டையை உருவாக்க முடியவில்லையென வைத்தியர்கள் முடிவாக கூறினார்கள். இறைவனின் அருளும் கூடியிருக்க, இந்நிலையை என்னால் மாற்றமுடிந்தது. இவர் இப்பொழுது ஆரோக்கியமான ஒரு மகளைப் பெற்றெடுத்துள்ளார்.

முப்பத்திரண்டு வயதுடைய பெண்(B), திருமணமாகி 4 வருடங்களாகியிருந்தன. மூன்று தடவைகளில் கருச்சிதைவடைந்து போனதாவும் (miscarriage), ஒழுங்கான மாதவிடாய்ச் சக்கரம் நடைபெறாமல் போனதாகவும் எனது சிகிச்சைக் கூடத்திற்கு வந்திருந்தபோது கூறினார். ஒழுங்கான மாதவிடாய்ச் சக்கரத்தை மீளப்பெறுவதே எனது சிகிச்சைத் திட்டத்தில் முதன்மையாகவிருந்தது. 5 மாதங்களில் சக்கரம் வழமைக்குத் திரும்பியது. இதன் பின்னர் இவரின் கருப்பையை வலுபடுத்தி காத்திரமாக்கியதோடு, முட்டையுற்பத்தியையும் ஒழுங்காக ஏற்படுமாறு சிகிச்சைத் திட்டம் வகுக்கப்பட்டது. இப்பொழுது இவர் ஒரு ஆறுமாதக் குழந்தையின் தாயாவார்.

முப்பத்தாறு வயதுடைய பெண் (C) PCOS (Poly Cystic Ovary Syndrome) எனக்கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. லேசான மாதவிடாய் போக்கு, எடை அதிகரித்தல், ஆண்கள் போன்று நாடி, மேலுதட்டின் மேல், முளைக்காம்பைச் சூழ ஆகியவிடங்களில் மயிர்வளர்ச்சி போன்றன இவரில் காணப்பட்ட நோய்நிலைக் குறிகளாகும். பல தடவைகளில் Clomid சிகிச்சை பயனளிக்காதபோது Metformin என்னும் மாத்திரை இவரது சிகிச்சை நிபுணரால் வழங்கப்பட்டது. 83Kg எடையுடனிருந்தவரை நான்கு மாதங்களினுள் 70Kg நிறைக்கு வெற்றிகரமாக குறைவடைந்தார், அத்துடன் அவரின் மாதவிடாய் போக்கில் முன்னேற்றம் காணப்பட்டது. இதன் பின்னர் ஆறு மாதத்திற்குள்ளாகவே கருத்தரித்து, இன்னுமொரு மாதத்தினுள் ஒரு குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

இருபத்தொன்பது வயது நிரம்பிய திரு(D) என்னைச் சிகிச்சைக் கூடத்தில் சந்தித்திருந்தபொழுது திருமணமாகி மூன்று வருடங்களாகியிருந்திருந்தன. இவருக்கு உடலுறவின் பொழுது ஆண்குறியின் விறைப்புத்தன்மையை தக்கவைக்க முடியாதநிலையிலிருந்தது. திருமணமான காலத்திலிருந்து ஒரு தடவை கூட இது நடைபெறவில்லை. இலங்கையிலிருந்த போது நடைபெற்ற சில துன்பமான நிகழ்ச்சிகளின் பின்விளைவாக (post traumatic stress disorder) இந்நிலை ஏற்ப்பட்டிருந்தது. இது அவரின் உடல், உளநிலைகளை பெரியளவில் பாதித்திருந்தது. மூலிகை போசாக்குக் குறைநிரப்பிகள் போனறவற்றின் உடலுதவியினால், ஆண்குறியின் விறைப்புத்தன்மை நீடிக்கப்பட, தற்பொழுது இவர் இரண்டு குழந்தைகளின் தந்தையாவர். மேலும் பல குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பது உணர்ந்தவர்.

நோய்க்கான அறிகுறிகள்:
ஆண்களின் (மகப்பேறின்மை) மலடு நிலைசம்பந்தமான அறிகுறிகள் பெரிதாக தென்படுவதில்லை. ஓமோன் சுரப்பில் குழறுபடிகள் கொண்ட ஆண்களில் குரலில் மாற்றம், தலைமயிர் வளர்ச்சியில் மாற்றம், மார்பு வளர்ச்சி அல்லது உடலுறவில் ஈடுபடமுடியாமை போன்றன விருத்தியடைகின்றன. பெண்களில் மாதவிடாய் சக்கரத்தில் ஒழுங்கீனங்கள், இனப்பெருக்க தொகுதிசார் ஏனையநோய் நிலைகள் போன்றன மாதவிடாய் போக்கின் பொழுதும் உடலுறவின் பொழுதும் நோவைத் தருகின்றன.

* பெண்களில் மகப்பேறின்மைக்காரன காரணிகள்:
(சூல்கொள்ளல், கருத்தரித்தல், கற்பம்பேணி குழந்தை பெறுதல்)

வயது
– 30 வயதுகளின் கடைக்கூற்றிலிருக்கும் பெண்கள் 20 வயதுகளின் ஆரம்பத்திலிருப்பவர்களைக் காட்டிலும் 30% குறைவாகவே கருத்தரிக்கக்கூடும்.
– கருப்பைச் சுவர் குழறுபடிகள் (Endometriosis)
– நீண்ட நாள் நோய்நிலைகள் (உ-ம் நீரிழிவு, Lupus, மூட்டுவீக்கம், உயர்ந்த இறுக்கம், ஆஸ்மா (தொய்வு).
– சூழல் காரணிகள் (உ-ம் புகை பீடித்தல், மதுவருந்தல், வேலைத்தள நிலைகள் /சூழல், தொழில்சார் நஞ்சுகள்)
– உடலிலுள்ள மிககுறைந்த / அதிகூடிய கொழுப்பளவு
– கற்பகாலத்தில் DES எடுத்தல்.
– உடலுறவினால் கடத்தப்படும் நோய்கள்
– பலோப்பியன் குழாயிலேற்படும் நோய்கள்
– பலதடவை கருச்சிதைவு

* ஆண்களில் மகப்பேறின்மைக்கான காரணிகள் :
மகப்பேறின்மை என்பது பெண்களுக்கு மட்டுமானதன்று ஆண்களின் பங்களிப்பில் ஏற்ப்படக்கூடிய குறைபாடுகள்/காரணிகள்:
– ஆண் இனப்பெருக்க தொகுதிலமைந்த சுக்கிலவக (prostate) சுரப்பியில் நோய், ஆண்குறியின் விறைப்புத்தன்மையைப் பேணமுடியாமை, உடலுறவினால் கடத்தப்படும் நோய்கள்.
– சூழலில்/ வேலைத்தலத்தில் ஆபத்துவிளைவிக்கும் இரசாயனங்கள் (கதிர்வீச்சு, கதிர்த்தாக்கம் கொண்டவை, ஈயம், ethylene, dibromine, vinyl chloride போன்றன)
– புகையிலை, மாஜவான ஏனைய போதைப் பொருட்களின் பாவனை.
– ஆதிகளவு மது உட்கொள்ளல்
– விதைப்பைகள் வெப்பநிலை அதிகமாகவிருத்தல் (உ-ம் இறுக்கமான, செயற்கை நூல்வகைத் துணிகளாலான கச்சை, வேலைத்தள வெப்பநிலை அளவுகள்)
– குடலிறக்க (hernia) திருத்தவேலை, சத்திரசிகிச்சை.
– விதைகள் விதைப்பையினுள் இறங்காமலிருத்தல்
– psoriasis நோய்க்கான சிபார்சிக்கப்பட்ட மருந்துகள்
– விடலைப்பருவத்தில் கூவைக்கட்டு (mums) வந்திருத்தல்.